இராசீவ்காந்தியின் வழியில் சோனியா

ஜனவரி 28, 2009

இந்திய அரசு சிங்கள அரசோடு கூடிக் குலவிக் கொண்டு அங்கு போராடும் மக்களைக் கொன்றொழிப்பது புதிதன்று. மலையக மக்களை சாத்திரி காலத்தில் நாடற்றவர்கள் ஆக்கியது. பின்னர் வந்த இந்திரா அங்கு தம் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்த சிங்கள உழைக்கும் மக்களின் அமைப்பாக இருந்த சனதா விமுக்த பெரமுன என்ற அமைப்பை (இன்றைய சனதா விமுக்த அமைப்பின் கொள்கையே வேறு) இந்தியப் படையை அனுப்பி முற்ற முழுதாக அழித்தார். அவர் மகன் இராசீவ்காந்தியோ ஈழவிடுதலைப் போரின் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளை அழிக்க நினைத்து தாமழிந்து போனார்.

இந்திராவின் மருமகளும், இராசீவின் மனைவியும், போபர்சு குற்றவாளியான குவரோச்சியின் உறவினருமான சோனியா இராசீவின் வழியில் இன்று படையினரையும் படைக்கருவிகளையும் சிங்கள அரசுக்குத் தாராளமாக அளித்து வருகிறார். 87இல் தமிழகத் தெருக்களில் அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பப்பட்ட அமளிப் படையின் நடமாட்டத்தைக் கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். முகஞ்சுளித்தனர்.

இன்று அந்தக் காட்சிகள் மீண்டும் அரங்கேறத் தொடங்கி உள்ளது. இந்தியப் படையின் பீரங்கிகள் (இவற்றை இந்தியர்கள் குடியரசு நாள் அணிவகுப்பின் போது மட்டுமே பார்ப்பர்.) ஈரோடை வழியாகச் கொச்சி சென்று அங்கிருந்து சிங்களனின் கைக்குப் போய் சேர்ந்துள்ளன. அணியணியாக அந்நிகழ்வு இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் போர்க்களத்தில் அந்த பீரங்கிகள் வெடிக்குமா என்று தெரியாது. சோனியா அம்மையார் அனுப்புகின்ற பீரங்கி அல்லவா? எவ்வளவு கையூட்டில் வாங்கியதோ? அந்த பீரங்கிகள் வெடிக்கின்றவோ இல்லையோ நாளை ஈழப் போர்க்களத்தில் தோல்வியைத் தழுவும் போது பழியை இந்த பீரங்கிகள் மீதுதான் சிங்கள அரசு போடப் போகிறது.

ஏற்கனவே புலிகளின் போர் வானூர்தியைக் கண்டறிய வக்கற்ற சிங்களம் இந்தியா கொடுத்த இரேடார் தரம் குறந்தது; அதனால்தான் கண்டறிய முடியவில்லை என்று சொன்னது அல்லவா? அதுபோலவே இப்பொழுதும் நடக்கும். சோனியா அம்மணி அவர் கணவர் வழியில் நடையிடுவதை யார்தான் தடுக்க முடியும். அப்படி நடையிடும் போது ஏற்படும் பழிகளும் அவர்களையே சாரும்.

காங்கிரசின் திமிர்

ஜனவரி 23, 2009

காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். அண்மையில் அவர், “இலங்கைச் சிக்கலில் இதற்கு மேல் இந்தியா எதுவும் செய்ய இயலாது” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.

தமிழர்களை அழிக்கப் போர்க் கருவிகளைக் கொடுத்து, சிங்களப் படைக்கு பயிற்சி கொடுத்து, ஆளனுப்பி குண்டு போட வைத்து, உளவு பார்த்து இப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின் இன்னும் என்னதான் செய்ய இருக்கிறது?

இலங்கை அரசைப் பார்த்துச் சொல்ல வேண்டியதை தமிழர்களைப் பார்த்துச் சொல்லும் இவர் பக்தவச்சலத்தின் உண்மையான பிறங்கடைதான். ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கும் நிலையிலும் இப்படி திமிரோடு பேச காங்கிரசாரைத் தவிர யாருக்குத்தான் மனம் வரும்?

இவர்கள் வேறு காந்தியின் வாரிசுகள்

ஜனவரி 22, 2009

மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உளவுத் துறைக் காவலர்கள் கண்டறிந்தனர். இச் செய்தி அப்போதே தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக சிங்களப் படையினருக்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளிக்கப் பட்ட செய்தி வெளியானது. இது குறித்து இந்திய அரசை நெருக்கிய போது அண்டை நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு பயிற்சி அளிப்பதாகவும் இது வழக்கமாக எல்லா நாடுகளுக்கும் செய்கின்ற உதவிதான் என்றும் சொல்லப்பட்டது. அப்படியென்றால் பாகித்தானுக்கும் அவ்வுதவி வழங்கப் படுமா என்று தமிழக மக்கள் இடையிலிருந்து எழுந்த கேள்விக்கு இன்று வரை விடையேதும் இல்லை.

அதையடுத்து இரேடார் வழங்கப் பட்ட செய்தி வெளியானது. இப்படி அடுக்கடுக்காக இலங்கைக்கு தாம் செய்து வரும் உதவிகள் அம்பலப்பட்டுப் போன நிலையில் வெளிப்படையாகவே போர்க் கருவிகள் வாங்குவதற்கென்றே நானூறு கோடி உருவாக்களை இந்திய அரசு சிங்கள அரசுக்கு வாரி வழங்கி தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது.

இன்றைக்கு பேராயக் கட்சி மீது தமிழக மக்கள் காட்டி வரும் வெறுப்புணர்வு சற்றே அந்த காங்கிரசாரின் எருமை மாட்டுத் தோல்களுக்கு உறைக்கத் தொடங்கி யுள்ளது போலும். அதனால்தான் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் தங்கபாலு இந்தியா, இலங்கைப் படைக்கு எந்த உதவியும் வழங்க வில்லை என்று கூறுகிறார். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்வார்கள். தமிழர்களை அப்படிக் கருதி விட்டார் போலும் தங்கபாலு.

“சத்திய மேவ செயதே” அதாவது “வாய்மையே வெல்லும்” என்று எங்கும் முழங்குவோர் அச் சத்தியத்தைக் காக்க எடுக்கும் முயற்சிகளைக் கண்டு நகைக்கத்தான் தோன்றுகிறது.

இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் என்ன பொக்கை வாய்க் கிழவன் காந்தியின் வழி வந்தவர்களா? போபர்சு பீரங்கி வாங்கி ஊழல் செய்து பிடிபட்டு நான் திருடனில்லை என்று புலம்பித் திரிந்த இராசீவ்காந்தியின் வழி வந்தவர்கள்தாமே.

இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி தேவையா?

ஜனவரி 18, 2009

“இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்” என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன.

இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எச்சரிக்கவும் செய்தார்கள்.

அந்தத் தீர்மானத்தோடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மயிலை மாங்கொல்லையில் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதாகவும் அது தமக்கு நிறைவை அளிப்பதாகவும் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார். அனைத்துக் கட்சித் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா முன்வராத நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போரை நிறுத்த வேண்டும் என்று ஓர் தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
தமிழ்நாட்டின் மக்கள் படிநிகராளிகள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்த அத் தீர்மானத்தையும் இந்தியா காலில் போட்டு மிதித்துக் கொண்டு கிளிநொச்சியை சிங்களப் படை எப்படி வெற்றி கொள்வது என்று அப்படைக்கு பாடம் எடுக்க இந்தியத் தளபதிகளை அனுப்பி வைத்தது.

இதோ இந்தக் கட்டுரை எழுதப் படும் வரை இந்தியா போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சார்க்கு நாடுகளின் மாநாடு தொடர்பாக இலங்கைக்குச் சென்று வந்த வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் அங்கிருந்த போதே போரை நிறுத்த இந்தியா வற்புறுத்த வில்லை என்றும், அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது என்று மட்டுமே கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இப்படி தமிழக மக்களின் உணர்வுகள் இந்திய அரசினால் மிகவும் கேவலமாக மதிக்கப் படுகின்றது. இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக தில்லி சென்ற அவர் தமிழக முதல்வரை மரியாதைக்குக் கூட சந்திக்கவில்லை. இது தமிழக மக்களுக்குப் பேரதிர்ச்சியை அளிப்பதாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இந்திய அரசின் அதிகாரி ஒருவர் கூட மதிக்க வேண்டிய அளவுக்கு தமிழக முதல்வர் பதவி அதிகாரம் உடையது இல்லை என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் உறுதிப் படுத்திச் சென்றிருக்கிறார் சிவசங்கர் மேனன்.

ஈழத் தமிழர் சிக்கல் என்பது தமிழக மக்களோடு உறவுடைய சொந்தங்களின் சிக்கல் என்பதோ அந்தச் சிக்கலில் தமிழக மக்களின் சார்பில் ஆண்டு கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு முதலமைச்சரைச் சந்தித்துக் கருத்து கேட்க வேண்டும் என்றோ இந்திய அரசோ, இந்திய அரசின் அதிகாரிகளோ எண்ணுவதே இல்லை.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் என்ற உறுதி மொழியை சிங்கள அரசு அளித்துள்ளது என்று நிறைவடைந்த இந்திய அரசு அந்த உறுதி மொழி எந்தளவுக்கு நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைக் கண்காணிக்கிறதா?

தொடர்ந்து தமிழக மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சாகடிக்க சிங்களப் படைக்கு கருவிகள் அளித்து மேலும் புதிய கருவிகள் வாங்க பணமும் அளித்து தமிழக மக்களின் உரிமையையும் இறையாண்மையையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான ‘சமஷ்டி’யைத் தான் ஆனந்த சங்கரிகள் விரும்புகின்றார்கள் போலும்.

“என் உயரம் எனக்குத் தெரியும்”, “நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என்றெல்லாம் புலம்புகின்ற நிலையில் உள்ளார் தமிழக முதல்வர். அவர் அந்த நாற்காலியில் நீடிப்பதற்குச் செய்து வரும் இரண்டகங்களைப் போல் செய்து அதே போன்ற நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று ‘சமஷ்டி’ கோரும் வீடணத் தமிழர்கள் வேண்டுகின்றனர் போலும்.

இந்தியாவிற்குள் தமிழினம் அடிமைப் பட்டுள்ளது. சமன்மையாக வாழவில்லை. இந்திய அரசு ஒரு கூட்டாட்சியே இல்லை. கூட்டாட்சி என்று ஒப்புக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒற்றையாட்சி முறையே நிலவி வருகிறது.

மாநில அரசு என்றொரு நிலை உள்ளதே என்று கேட்டால் அதிகாரமற்ற வெறும் நிர்வாக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகவே மாநில அரசுகள் இயங்கி வருகின்றன.

காவல் துறை என்பது இந்திய அரசியல் அமைப்புப் படி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருகின்ற ஒன்று. மும்பைத் தாக்குதலுக்குப் பின் அவ்வதிகாரத்தை குறுக்கு வழியில் இந்தியா இன்றைக்கு தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. உள்ளாட்சி மன்றங்கள், ஊராட்சிகள் மாநில அதிகாரத்திற்குள் வருவன.
அவற்றை இராசீவ்காந்தி தன் ஆட்சிக் காலத்திலேயே பஞ்சாயத்துராச்சு சட்டத்தின் மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக நேரடியாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்குவது என்பதன் மூலமும் இந்தியாவின் கைக்குள் கொண்டு வந்து விட்டது இந்தியா.

கல்வியை இந்திராகாந்தி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்று விட்டார்.

இப்படி அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சில்லறை அதிகாரங்களைக் கூட படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு.

இந்த நிலையில் ஈழத்தில் இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி வேண்டும் என்று கேட்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

ஈழமக்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் விடுதலை வேண்டி நிற்கும் விடுதலைப் புலிகளைத்தான் நம்பியிருக்கின்றனர்.

கருணாக்களும், பிள்ளையான்களும், ஆனந்த சங்கரிகளும் அம்மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களால் தத்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இந்திய அரசு தத்தெடுத்த வரதராசப் பெருமாளுக்கு நேர்ந்ததுதான் இவர்களுக்கும் என்பதை காலம் காட்டும்.

திசெம்பர் 13, 2008

மரத்தமிழர்களே அணி திரள்வீர்

இந்தியாவின் எதிரிகளின் எலும்பொடிப்போம்!

அன்பார்ந்த தமிழக மக்களே!

தம் வாழ்நாள் முழுவதும் ஈழத்தமிழரின் உரிமைக்காகப் பாடுபட்ட நம் அருமைத் தலைவர் ராஜீவ்காந்தியை தமிழினத் துரோகிகள் படுகொலை செய்துவிட்டனர் என்ற உண்மையை நம் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு உரக்க முழங்கியுள்ளார். ஆனால் நன்றி கொன்ற தமிழ் மக்களோ தலைவர் ராஜீவ்காந்தி சிலையை உடைத்துப் போடுகின்றனர். தலைவர் ராஜீவ்காந்தி இந்த நன்றி கொன்ற தமிழினத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்ப்போம்.

யாழ்பாணத்தில் போரில் வெற்றி முகத்தில் இருந்த ஈழப்புலிகளை அடக்க இலங்கைக்கு அமைதிப் படை அனுப்பி பத்தாயிரம் தமிழர்களைக் கொன்று வீடுபேறளித்த அருமைத் தலைவரின் சிலையைத் தகர்ப்பதை எந்த மானங்கெட்ட தமிழன்தான் பொறுத்துக் கொண்டிருப்பது? எத்தனை தமிழச்சிகளின் தாலி பறிபோகவும், கற்பு களவு போகவும் காரணமாக இருந்தார் நம் அருமைத் தலைவர் ராஜீவ்காந்தி? அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கலாமா? அப்படி மாசு கற்பிக்கும் தமிழினம் உயிரோடு இருக்கலாமா?

அதற்காக அண்டைநாட்டில் வாழும் தமிழர்களைக் கொல்லும் பணியில் ஈடுபடும் சிங்களப் படைக்கு ரேடாரும் அவர்களின் விமானங்களை இயக்கி குண்டு போட விமானிகளையும் அன்னை சோனியாவின் ஆசி பெற்ற பொருளாதார மேதை மன்மோகன் சிங்கின் அரசு அளித்தால் தவறா? நம் நாடு வறுமையில் இருந்தாலும் இலங்கை அரசு ஆயுதம் வாங்க நானூறு கோடி கொடுத்து நன்றி கொன்ற தமிழினத்தை அழிக்கும் திருப்பணியில் பங்கு கொண்ட இந்திய அரசைப் பழிக்கலாமா? தமிழ்நாடு இருளில் இருந்தாலும் சிங்கள நாட்டுக்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் போட்டால் சிலருக்கு பொறுக்க முடியவில்லை. இங்குள்ள சில துரோகிகள் நம்மைத் தூற்றுகிறார்கள். அவர்களைச் சும்மா விடலாமா? பொடா, தடா, குண்டர் சட்டங்கள் எதற்காக உள்ளன? பிடித்து உள்ளே போட வேண்டாமா? நம் தயவில் ஆட்சி நடத்தும் துரோகி கலைஞர் கருணாநிதி பிரிவினைவாதிகளோடு கைகோர்த்து மனித சங்கிலி நடத்துகிறாரே! பொறுத்துக் கொள்ளலாமா? நடிகர்களையும் இயக்குநர்களையும் தூண்டி விட்டு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்த வைத்தாரே கலைஞர் கருணாநிதி. அவர் ஆட்சி நீடிக்கலாமா? அதற்காகத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகத் தேவையில்லை; தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுங்கள் என்று சொல்கிறோம்.

நாம் கொடுத்த நானூறு கோடியில் ஆயுதம் வாங்கி தமிழக மீனவர்களையும் கொல்கிறது என்கிறார்கள் சிலர். தமிழன் எங்கிருந்தால் என்ன? சாக வேண்டியவன்தானே! காங்கிரசுக்கும் நம் நல்வாழ்வுக்கும் தடையாக இருக்கும் தமிழர்கள் செத்துத் தொலைய வேண்டியதுதானே!

தமிழனின் மானம் கப்பலேறக் கூடாது என்பதற்காக கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு நாம் என்ன செய்தோம்? அவரை மண்ணெண்ணையும் அரிசியும் விற்க வைத்து அரசியலை விட்டே ஓட வைத்தோம். அதுதானே மரத்தமிழர் காங்கிரசின் கடமை. அந்த வழியில் செல்வதுதானே தலைவர் தங்கபாலுவின் வழியும் அண்ணன் ஞானசேகரனின் வழியும். நாம் பாதை மாறலாமா?

நம் தலைவர் தங்கபாலு சொல்வதைத் தட்டாமல் ஏற்றுக் கொண்டு முதல்வர் கலைஞர் அமீரையும் சீமானையும் சிறைபிடித்தார் அல்லவா? அதே போல் கலைஞர் கருணாநிதி மயிலை மாங்கொல்லையில் பேசும்போது ஒட்டு மொத்தமாக தமிழர் அனைவரும் சாவோம் என்று சொன்னாரே. அதை நிறைவேற்றி கடனைக் கழித்து விடுவதுதானே காங்கிரசாரின் கடமை. அனைவரும் இந்திய அரசோடு கைகோர்த்து சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கி, கூடவே ஆயுதத்தால் தீர்வு வராது; பேச்சு வார்த்தையாலே தீர்வுஎன்று அறிவுரையும் வழங்கி அறிவுரையை தீவிரவாத புலிகள் ஏற்கவில்லை என்ற பழியையும் போட்டு தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம். கலைஞர் கருணாநிதி வாக்கை நிறைவேற்றுவோம்.

காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, ஒகேனக்கல் பிரச்சனை ஆகியவற்றில் இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யவில்லை என்று மேடை போட்டு பேசுகின்றனர். இவர்கள் இப்படி பேசுவதற்கு உரிமை வாங்கித் தந்தது இந்த காங்கிரஸ்தான் என்பதை மறந்து விட்டுப் பேசுகின்றனர். அப்படிப் பேச விடலாமா? அந்த உரிமையை வாங்கியது இவர்கள் பேசுவதற்காகவா? இனி நம்மைத் தவிர யாரும் எதுவும் பேசக்கூடாதென முதல்வருக்கு ஆணையிடும் அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது. இழவுக்கு அழக்கூட முதல்வருக்கு நாம்தானே அனுமதி அளிக்க வேண்டும். தவறிப் போய் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வரை நாம் எப்படி பாய்ந்து பிடுங்கினோம். அதைக்கூட அறியாமல் மைக் கிடைத்து விட்டது என்று வாய்கிழியப் பேசுகிறார்கள் இந்த இயக்குநர்கள். இந்தப் பிரிவினைப் பேச்சை எப்படி அனுமதிப்பது? இதிலெல்லாம் நமக்குத் துணை நின்ற செல்வி ஜெயலலிதாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம் அன்னை சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று சொன்னதை மறந்து விட்டு இந்த விஷத்தில் நாம் அவரோடு கை குலுக்க வேண்டும்.

தங்கபாலு கோஷ்டி, வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி …. இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக பிரிந்து கிடப்பதற்கு காங்கிரஸ்காரர்களாகிய நமக்குத்தானே உரிமை உள்ளது. இந்தப் பிரிவினையை மறந்து விட்டு நதிநீர், மின்சாரம், அரிசி என்று பிரிவினை பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதைத் தமிழகத்தில் மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதுதானே இந்திய இறையாண்மை. மராட்டியத்தில் சொன்னால் மரண அடி கொடுக்கிறான். அசாமின் எல்லைக்குள் விட மறுக்கிறான். காஷ்மீர் கண்ணெதிரே கழன்று செல்கிறது. கருநாடகத்தான் அவன் மட்டுமே இந்தியா என்று நினைத்துக் கொள்கிறான். இளிச்சவாய் தமிழனிடத்தில்தான் நம் இறையாண்மை, ஒருமைப்பாடு பஜனை செல்லுபடியாகும். செல்லுபடியாகும் இடத்தில் விற்பதுதானே நல்ல வியாபாரிக்கு அழகு. நமக்கு இது தெரியாதா? இது தெரியாமல் இன உணர்வு, அது இது… என்று இங்குள்ள சில ஏமாளிகள் பிதற்றித் திரிய கதர் சட்டைப் போட்ட காங்கிரஸ்காரன் அனுமதிப்பானா? அகிம்சை வழியில் கைது செய்து உள்ளே தள்ளி நாலு சாத்து சாத்தினால் போதாதா?

இப்படி இலங்கையிலும் இங்கும் தமிழினத்தை ஒரே அடியாக அழித்து விட்டு சிங்களரை ஓட்டுப் போட வைத்து நாம் நாட்டை ஆள்வோம். அடுத்த முறையாவது அன்னை சோனியாவின் ஆட்சி மலரப் பாடுபடுவோம். அந்த அமைச்சரவையில் தலைவர் தங்கபாலுவையும் அண்ணன் ஞானசேகரனையும் அமர்த்தி அழகு பார்ப்போம்.

ஜெய் ஹிந்த்!          ஒழிக தமிழினம்!!

இப்படிக்கு

மானங்கெட்ட மரத்தமிழர் காங்கிரஸ்

(பின் குறிப்பு: இந்த நோட்டீஸ் எந்த வித பிரிவினைவாத எண்ணத்தோடும் இன மோதல்களைத் தூண்டும் எண்ணத்தோடும் வெளியிடப்பட வில்லை என்பதால் இதன்மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எங்கள் உடலில் ஓடும் சாக்கடை நீரால் காவல்துறையின் கால்களைக் கழுவி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.)

Hello world!

திசெம்பர் 13, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!